Sign in to follow this  
Followers 0
வேக்கப்

‘ஆபத்தில் இருக்கும் மொழி’ - எந்த மொழி

Rate this topic:

9 posts in this topic

சுவர்களுடன் பேசும் மனிதர்

அ.முத்துலிங்கம்

கனடாவிற்கு வந்து ஏற்பட்ட பிரச்சினைகளுள் ஒன்று தலைமுடி வெட்டுவது. நான் வசித்த வீட்டிலிருந்து தலைமுடி திருத்துமிடம் நாலே நிமிட தூரத்தில் இருந்தது. கடந்த ஏழு வருடங்களாக மாதம் ஒருமுறை அங்கே சென்றிருக்கிறேன். அதன் உரிமையாளர் ஓர் இத்தாலியர், பெயர் ரோனி. அவரும் இரண்டு மூன்று உதவியாளர்களும் அங்கே வேலை செய்தார்கள்.

ரோனி நட்பானவர். அவருடைய முடி அலங்கோலமாக சிதறுண்டு போயிருக்கும். நான் அவருக்குச் சொல்வேன், ‘என்ன உங்களுடைய முடியே இப்படித் தாறுமாறாக இருக்கிறது. உங்கள் வாடிக்கைக்காரர்கள் இதைப் பார்த்து வராமல் போய்விடுவார்கள்.’ அவர் சொல்வார், ‘என்ன செய்வது. என்னைப் போல ஒரு நல்ல முடிதிருத்துபவர் கிடைத்தால் உடனே தலையைக் கொடுத்துவிடுவேன். இங்கே எல்லோருமே மோசம். அதுதான் முடி வெட்டுவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறேன்.’

நானும் ரோனியைப் போல அவருடைய உதவியாளர்களிடம் தலையைத் தரமாட்டேன். வரிசையில் உட்கார்ந்திருக்கும் வாடிக்கைக்காரர்களுடன் என் முறைக்காகக் காத்திருப்பேன். ரோனியிலே எனக்குப் பிடித்தது அவசரமின்மை. நிதானமாக தொழில் சுத்தமாக வேலையை முடிப்பார். எப்படி வெட்டவேண்டும் என்று கேட்கமாட்டார். என்ன சைஸ் கிளிப் என்று கேட்கமாட்டார். பிடரியில் நேர் வெட்டா அல்லது குறைவெட்டா என்றெல்லாம் கேட்கமாட்டார். ஒவ்வொரு வாடிக்கைக்காரருக்கும் அவரிடம் குறிப்பு உண்டு. தையல்காரரிடம் இருப்பதுபோல, மருத்துவரிடம் இருப்பதுபோல. அதைப் பார்த்து தன் வேலையைச் செம்மையாக முடித்துவைப்பார்.

அவரிடம் எனக்குப் பிடிக்காத ஓர் அம்சமும் இருந்தது. ரோனி விளையாட்டுப் பிரியர். அவர் தலைமுடி வெட்டும் போது முதல் நாள் நடந்த ஐஸ் ஹொக்கி பற்றி அல்லது கூடைப்பந்து பற்றி அல்லது பேஸ் போல் பற்றி ஓயாது பேசுவார். விளையாட்டைப் பற்றித் தெரியாது என்று சொன்னால் கனடாவில் ஒரு புழுவைப் பார்ப்பதுபோலப் பார்ப்பார்கள். ஆகவே முதல் நாள் நான் அதற்குத் தயாரிக்கவேண்டும். தொலைக்காட்சியில் விளையாட்டுகளைப் பார்த்து முக்கியமான குறிப்புகளை எடுத்து வைத்துக் கொள்வேன். அடுத்த நாள் முடிதிருத்தும்போது ஏதாவது ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைச் சொல்லி அவரை மகிழ்விப்பேன். அன்று முடிவெட்டு உத்தமமாக அமையும்.

ஆனால் எத்தனை வருடங்கள் தான் இந்த நாடகத்தை ஆடமுடியும். எனக்கும் அலுப்பு பிடித்தது. நான் வேறு இடத்தில் முடிவெட்ட ஆரம்பித்தேன். அது 20 நிமிட தூரத்தில் இருந்த பெரிய நிலையம். பெண்கள் பகுதி தனியாக இயங்கியது. ஆட்கள் வருவதும் போவதுமாக ஒரே கலகலப்பு. நான் வாயே திறக்காத ஒரு வேலைக்காரரிடம் போகலாம் என்ற முடிவில் இருந்தேன். என்னுடைய முறை வந்தபோது, புதன்கிழமை என்ற வாசகம் எழுதிய தடித்த உடையை, வியாழக்கிழமை அணிந்திருந்த ஐம்பது வயதுக்காரர் ஒருவர் என் முடியை வெட்டத் தயாராயிருப்பதாகச் சொன்னார். ஒருநாள் பிந்திய ஆள் என்றாலும் அவர் தலையை சரித்து புன்னகைத்த விதம் எனக்குப் பிடித்துக்கொண்டது.

அவர் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. கருமமே கண்ணாகி அவர் முடியை வெட்டி முடித்ததும் கண்ணாடியில் பார்த்தால் அது வெகு நேர்த்தியாக இருந்தது. ஒரு கலைஞனின் வேலை என்பதில் சந்தேகமே இல்லை. அவருடைய கைகள் வண்ணத்துப்பூச்சி போலத் துரிதமாக இயங்கின. தலையிலே ஆடிக்கொண்டிருக்கும் ஆயிரம் முடிகளில் ஒரு மயிரை மட்டும் அவர் கத்தரிக்கோல் தேடி லாவகமாக வெட்டும். அவ்வளவு நுட்பமான கலைஞன்.

அடுத்த முறையும் அவர்தான் வெட்டினார். அதற்கு அடுத்தமுறை சென்றபோது அவருக்காகக் காத்திருந்து அவர் முடிவெட்ட ஆரம்பித்தபோது ஒரு சம்பவம் நடந்தது. அவரைப் பார்த்தால் மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்தவர் போலத் தோற்றமளித்தார். கண்கள் பழுப்பு நிறத்திலும் முடி கறுப்பாகவும் இருந்தது. அவருடைய நடை உடை பாவனைகள் எல்லாம் வித்தியாசமாகவே தோன்றின. வாடிக்கைக்காரர்களிடம் பேசும்போது அவருடைய உச்சரிப்பு அரேபியர்களுடையதைப்போல இருந்ததையும் கவனித்தேன்.

அன்று பெண்கள் பகுதியில் இருந்து மிக நாகரிகமாக உடையணிந்திருந்த ஒரு பெண் இவரிடம் வந்தாள். கறுப்புக் காலணியும் சிவப்புக் கையுறையுமாக பார்த்தவுடனேயே அவள் அரேபியப் பெண் என்று சொல்லிவிடலாம். வயது முப்பதுக்குள்தான் இருக்கும். அதிகாரம் செய்தே பழக்கப்பட்டவள் போல ஒருகையை இடுப்பில் வைத்து சாய்ந்து நின்றாள். ஏதோ அரபு போன்ற மொழியில் அவரிடம் வேகமாகப் பேச அந்த மனிதர் ஒரு வார்த்தையில் ஏதோ சொன்னார். அந்தப் பெண் மீண்டும் சங்கிலித் தொடர்போல நிற்காமல் பேசினாள். இவர் மறுபடியும் சுருக்கமாக பதில் கூறினார். அவள் தொடர்ந்து ஏதோ கேட்க ‘உனக்குக் கேட்கவில்லையா. எனக்கு அரபு மொழி தெரியாது’ என்று உரத்து ஆங்கிலத்தில் சொன்னார். ஒரு குதிரை பக்கவாட்டில் நகர்வது போல அவள் நகர்ந்து சற்று எரிச்சலாகவே அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

எல்லோரும் இவரையே பார்த்தார்கள். இவர் ஒருவிதப் பதற்றமும் இன்றி முன்புபோல அமைதியாக என் முடியை வெட்டிக்கொண்டிருந்தார். நான் முதன்முதலாக இவரிடம் பேச்சுக் கொடுத்தேன். இவர் ஈராக்கில் இருந்து போருக்கு முன்னர் சதாம் காலத்தில் கனடாவுக்குக் குடிபெயர்ந்தவர். அந்தப் பெண் தலைமுடியலங்காரம் செய்ய வந்திருக்கிறாள். அவளுக்கு ஆங்கிலம் தெரியாது. அவள் பேசும் அரபுவை மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் கூறுமாறு கேட்டிருக்கிறாள். இவர் தனக்குத் தெரியாது என்று சொல்லியிருக்கிறார். ஈராக்கில் இருந்து புலம் பெயர்ந்த ஒருவருக்கு அரபு மொழி தெரியாது என்பதை அவள் நம்பவில்லை. அதுதான் கோபமாகச் செல்கிறாள்.

எனக்கு ஆச்சரியம். நான் வாழ்நாளில் சந்திக்கும் முதல் ஈராக்கியர் இவர்தான். ஆதி காவியமான கில்காமேஷ் இலக்கியம் பிறந்த நாடு என்று எனக்கு ஈராக்கில் மதிப்பு உண்டு. நாலாயிரம் வருடங்களுக்கு முன்பு சுமேரிய எழுத்தில் எழுதிய அந்தக் காவியம் இன்றும் களிமண் தட்டைகளில் அங்கே பாதுகாக்கப்படுகின்றன.

நான் அவரிடம் கேட்டேன். ‘எப்படி உங்களுக்கு அரபு மொழி தெரியாமல் போனது?’

நான் ஈராக்கில் பிறந்தாலும் அநேகமாக வெளிநாடுகளில்தான் வளர்ந்தேன். என்னுடைய தந்தையார் ஈரான், சிரியா போன்ற நாடுகளில் வேலைசெய்தார். நான் பொறியியல் படிப்பு படித்தவன். ஈராக்கில் தொடர்ந்து வாழமுடியாமல் தஞ்சம் கேட்டு கனடாவுக்கு வந்தோம். என் மகன் இப்போது வெளிநாட்டில் வேலை செய்கிறான். நான் இங்கே தனியாகத்தான் வாழ்கிறேன்.

பொறியியல் படித்துவிட்டு எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தீர்கள்?

நான் மாத்திரமில்லை. என்னைப் போலப் பலபேர் இங்கே வந்து முற்றிலும் வேறு வேலை செய்கிறார்கள். ஆங்கிலத்தில் இன்னொருமுறை பொறியியல் படிக்க என்னால் முடியவில்லை. ஆனால் எனக்கு இந்த தொழிலில் ஒரு மோகம் என்று சொல்லலாம். மூன்று மாதப் பயிற்சியில் முடிவெட்டப் பழகிவிட்டேன். இதுவும் பொறியியல் போலத்தான். மிகப் பெரிய கலை. ஒவ்வொருநாளும் நான் வீட்டுக்குப் போகுமுன்னர் ஒரு புது விசயம் கற்றுக்கொண்டு போவேன்.

என்னால் நம்பமுடியவில்லை. இந்த மனிதரை அதிசயத்தோடு பார்த்தேன். இனிய புன்னகை மாறாமல் தொழிலில் கவனமாக இருந்தார். ‘நீங்கள் இன்னும் ஆரம்பக் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. நீங்கள் என்ன மொழி பேசுவீர்கள்?’ என்றேன்.

‘நான் படித்தது பாரசீக மொழி. அது தொழிலுக்காக. வீட்டு மொழி அராமிக்.’

‘அராமிக்கா? கேள்விப்பட்டதில்லையே.’

‘அப்படி ஒரு மொழி இருக்கிறது. என் மகனுக்கும் கொஞ்சம் தெரியும். என் மனைவியும் நானும் வீட்டிலே அதுதான் பேசுவோம். போன வருடம் என் மனைவி இறந்துவிட்டார். எனக்கு இங்கே என் மொழி பேசுவதற்கு ஒருவருமே இல்லை. கனடாவில் இந்த மொழி பேசுபவர்கள் சிலர் இருப்பதாகக் கேள்வி. ஆனால் அவர்களுடன் என்னால் தொடர்பு கொள்ளமுடியவில்லை.’

‘அராமிக் மொழி பேசும் நாடு என்று ஏதாவது உண்டா?’

‘அப்படி இருந்தால் அது பெரிய வரம் அல்லவா? நான் Syrian Othodox Churchஐச் சேர்ந்த கிறிஸ்தவன். சதாம் ஆட்சியில் நாங்கள்பட்ட கொடுமைகளைச் சொல்லி ஆற்ற இயலாது. உலகத்தில் இன்று ஒரு மில்லியன் மக்கள் அராமிக் மொழியைப் பேசுகிறார்கள். ஆனால் துயரம் என்னவென்றால் அவர்கள் ஓர் இடத்தில் இல்லை. அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. சிதறிப் போய் ஈரான், ஈராக், இஸ்ரேல், லெபனான், சிரியா போன்ற பல நாடுகளில் சிறு சிறு குழுக்களாக வாழ்கிறார்கள். அவர்கள் எங்கே வாழ்ந்தாலும் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்தான். உலகத்துக்கு முதன்முதலாக சட்டத்தொகுப்பை வழங்கியவன் 3700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எங்கள் மன்னன் ஹமுராபி. ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பதற்குத்தான் அவன் சட்டம் இயற்றினான். இன்று நாங்கள் ஒடுக்கப்பட்டு, துரத்தப்பட்டு நாடு நாடாக அலைந்துகொண்டிருக்கிறோம்.’

‘கனடா நீங்கள் தேர்ந்தெடுத்த நாடுதானே. இங்கே உங்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டல்லவா?’

‘நண்பரே, இது சொர்க்கம். இதில் என்ன சந்தேகம். இங்கே வந்தபின் நான் நினைத்தேன் ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒவ்வொருவரும் ஒரேயொருநாள் என்றாலும் கனடாவில் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று. அப்பொழுதுதான் அவர்களுக்குச் சுதந்திரக் காற்று என்பது என்னவென்று தெரியவரும். நான் சொன்னது எங்கள் மொழியை. இன்று அது அழிந்துகொண்டு வருகிறது. எங்கே எங்கேயெல்லாம் எம்மக்கள் வாழ்கிறார்களோ அங்கேயெல்லாம் எங்கள் மொழி விழுங்கப்படுகிறது. ‘ஆபத்தில் இருக்கும் மொழி’ என்று எங்கள் மொழியை அறிவித்துவிட்டார்கள். இன்னும் சில வருடங்களில் அது அழிந்து போகக்கூடும்.’

‘அப்படி நிச்சயமாகச் சொல்ல முடியுமா?’

‘அப்படித்தான் அறிவித்திருக்கிறார்கள். நீங்கள் இரவு நேரத்தில் என் வீட்டுக்கு வந்தால் நான் அராமிக் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். சுவர்களுடன் அராமிக்கில் பேசுவேன். பழக்கம் விட்டுப்போய் விடுமே என்ற பயம். நான் பேசும் ஒவ்வொரு நிமிடமும் என் மொழி வாழ்ந்துகொண்டிருக்கிறது.’

இப்பொழுது அவர் முடிவெட்டுவதை நிறுத்திவிட்டார். சற்று எட்ட நின்று தலையை இரண்டு பக்கமும் சரித்து என் முடியை உன்னிப்பாகக் கவனித்தார். பின்னர் முகத்தைப் பார்த்தார். திடீரென்று ‘ஷாம்பூ போடவா?’ என்றார். நான் சம்பாஷணை தொடரவேண்டும் என்பதில் ஆவலாயிருந்தேன். சரி என்று தலையாட்டினேன்.

‘நான் நிறைய பேசிவிட்டேன். நீங்கள் எந்த நாடு, என்ன மொழி பேசுவீர்கள் என்று சொல்லவில்லையே?’.

நான் சொன்னேன். நானும் உங்களைப் போலத்தான். நான் பேசுவது தமிழ்மொழி. இலங்கைக்காரன். அங்கே எங்கள் மொழியை சிங்களம் விழுங்கிக்கொண்டிருக்கிறது.

உங்கள் மொழியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பழைய மொழி அல்லவா?

அது உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்கள் எங்களிடம் இருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகள் முன்னராகவே செதுக்கிய தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் குகைகளில் கிடைக்கின்றன. இன்று உலகத்தில் பல நாடுகளில் 80 மில்லியன் மக்கள் தமிழ் பேசுகிறார்கள்.

எண்பது மில்லியனா? நம்பவே முடியவில்லை. எங்கள் மொழியிலும் பார்க்க 80 மடங்கு அதிகமான எண்ணிக்கை. அதிர்ஷ்டம் செய்த மொழி. ஆனால் உங்களுக்கென்று ஒரு நாடு உண்டா?

இல்லை.

உங்கள் மொழியில் தேசிய கீதம் உண்டா?

இல்லை.

அப்படியானால் உங்கள் மொழிக்கும், என் மொழிக்கும் பெரிய வித்தியாசமே இல்லை.

எப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்லமுடியும்?

நீங்கள் வரலாற்றைப் படித்தால் தெரிந்துவிடும். கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ஹீப்ரு மொழியும், அராமிக் மொழியும் செழித்து வளர்ந்தன. இரண்டுக்குமே சமவயது. இரண்டிலுமே எழுதப்பட்ட செல்வங்கள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாளடைவில் இரண்டு மொழிகளுமே நலிந்தன. 100 வருடங்களுக்கு முன் ஹீப்ரு மொழி எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. பேசுவதற்கு ஓர் ஆன்மா இல்லை. இன்று ஐந்து மில்லியன் மக்கள் ஹீப்ரு பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். பழைய இலக்கியங்களும் புதிய இலக்கியங்களும் படிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நாடு உண்டு. அதன் பெயர் இஸ்ரேல். அவர்களுடைய மொழி இனி மேல் அழியவே அழியாது.

நாடு இல்லாமல் ஒரு மொழி வாழமுடியாது என்று சொல்கிறீர்களா?

நான் ஒரு தலைமுடி திருத்துபவன். மொழியியல் அறிஞன் அல்ல. எனக்கு என்ன தெரியும்? நாடு இல்லாமல்தானே என் மொழி சிதைந்தது. நாடு இருந்தபடியால் தானே இறந்து போன ஹீப்ரு மொழி மறுபடியும் உயிர்பெற்று நிலைத்து நிற்கிறது. உங்கள் மொழி - தமிழ் - நாடு இல்லாமல் வாழும் என்று நினைக்கிறீர்களா?

‘ஆனால் இந்தியாவில் ஒரு தமிழ் மாநிலம் இருக்கிறதே.’

மாநிலம் வேறு. நாடு வேறு. இன்று உலகத்திலுள்ள ஒரு சின்னஞ் சிறிய நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் - மால்ட்டா. அங்கே 400,000 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய மொழி மால்ட்டீஷ். அந்த மொழி அழியுமா? அழியாது. ஒரு மைல்கல் எப்போதும் உண்மை பேசுவதுபோல நான் பேசுகிறேன். அவர்களுடைய மொழி அழிய வேண்டும் என்றால் முதலில் அந்த நாடு அழியவேண்டும். உங்கள் நாட்டுக்கு சமீபத்தில் இருக்கும் மாலை தீவு, அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடைய சனத்தொகை 350,000. அவர்களுடைய மொழி திவேஹி. அது அழியுமா? எப்படி அழியும்? 300,000 மக்கள் வாழும் நாடு ஐஸ்லாண்ட். அவர்களுடைய மொழி ஐஸ்லாண்டிக். அது அழியுமா? இல்லை. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது. பத்து மில்லியன் மக்கள் ஒரு மொழியைப் பேசினாலும் அவர்களுக்கு ஒரு நாடு இல்லாவிட்டால் அந்த மொழி அழிந்துவிடும் என்று சொல்கிறீர்கள்?

ஷாம்பூ போட்டு முடிந்ததும் அவர் முடி உலர்த்தியால் தலைமுடியைச் சீவி உலர்த்திக்கொண்டிருந்தார். அவர் வாய் மட்டுமே பேசியது, ஆனால் கைகள் வேறுயாருடையவோ கைகள்போலத் துரிதமாக வேலை செய்தன.

அப்படித்தான் என் சிற்றறிவுக்குப் படுகிறது. ஒரு மொழிக்குப் பாதுகாப்பு வேண்டும். ஒரு நாடுதான் அதைக் கொடுக்கமுடியும். உலகத்தில் 7000 மொழிகள் இருக்கின்றன என்று படித்திருக்கிறேன். அவற்றிலே 2000 மொழிகள் அழிவில் இருக்கின்றன. மீதியில், ஒரு நாடு பாதுகாப்புக் கொடுக்கமுடியாத மொழிகள் எல்லாம் ஒவ்வொன்றாக அழிவை நோக்கி நகர்கின்றன. அனைத்து மொழிகளையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவற்றை சேமிக்கவேண்டும். ஆவணப்படமாகவும், ஒலி வடிவமாகவும் கணிமைத் தொழில்நுட்பத்தில் பாதுகாக்கலாம். ஒரு மொழி அழிவது என்பது ஓர் இனம் அழிவதற்கு, ஒரு கலாச்சாரம் அழிவதற்கு சமம். கீழே விழுந்த முடியை திரும்பவும் ஒட்டமுடியாது. மொழியும் அப்படித்தான். பூமியிலிருந்து ஒரேயடியாக மறைந்துவிடும்.

நான் பேசமுடியாமல் அவரையே பார்த்தேன்.

‘ஒரு மொழியின் எதிர்காலத்தை அதைப் பேசும் மக்களின் எண்ணிக்கை தீர்மானிப்பதில்லை. அது போல அதன் வளர்ச்சிக்கும் எண்ணிக்கைக்கும் சம்பந்தமில்லை. ஒரு சின்னப் பரிசோதனை. உங்கள் நாட்டு சிங்கள மொழியின் கடந்த 50 வருட கால வளர்ச்சியுடன் தமிழ் மொழியின் ஐம்பது வருட வளர்ச்சியை ஒப்பிட்டுப் பாருங்கள். நான் சொல்வது உங்களுக்கே புரியும்.’

புதிய முடி அலங்காரத்தை நான் கண்ணாடியில் பார்த்தேன். திருப்தியாகவிருந்தது. காசாளரிடம் பணத்தைக் கட்டினேன். ஈராக்கிய நண்பரின் பெயரைக்கூட நான் அதுவரை தெரிந்திருக்கவில்லை. அது முக்கியமாகவும் படவில்லை.

எனக்குக் கவியின் வரிகள் ஞாபகத்துக்கு வந்தன.

நான் சாக்கடையில்

விழுந்து கிடக்கிறேன்.

என் கண்கள்

நட்சத்திரங்களில்.

நான் என் மொழி மீது வைத்த நம்பிக்கையைத் துறக்கத் தயாராகவில்லை.

அவர் என்னை மூடியிருந்த போர்வையைக் கையிலே விரித்துப் பிடித்தபடி ஒரு மாட்டுச் சண்டைக்காரர் போல நின்றார். தத்தம் மொழிகளை இழந்துகொண்டுவரும் இருவரையும் ஒரு போர்வை பிரித்தாலும் அவர் வேதனையும் இழப்பும் துயரமும் என்னுடையது போலவே இருந்தது. எப்படி இவரிடம் விடைபெறுவது என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவர் அந்தச் சமயத்தில் எதைச் சொல்லக் கூடாதோ அதைச் சொன்னேன்.

‘நண்பரே, அழிவை நோக்கிப் பயணிக்கும் ஒரு மொழியை நிறுத்த, தனிமனிதர் ஒன்றுமே செய்யமுடியாது. இன்றிரவு சுவருடன் உங்கள் உரையாடல் இனிமையாக அமையட்டும்.’

‘என்ன, அப்படிச் சொல்லி விட்டீர்கள். ஒரு மொழியை அழிய விட்டுவிடுவோமா? அது யேசு பேசிய மொழி அல்லவா?’

நான் திடுக்கிட்டேன். கடந்து போன பிறகும் முடிவெட்டு நிலையக் கதவுகள் நெடுநேரம் ஆடின.

http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=62

Edited by வேக்கப்

Share this post


Link to post
Share on other sites

கவலை வேண்டாம் தமிழ், தெலுகு, கன்னடம் மலையாளம் அழியவே அழியாது

Share this post


Link to post
Share on other sites

புடரியில் அடிக்கும் பதிவு.. பதிவருக்கு நன்றி..

பதிவை பகிர்ந்து கொண்ட வேக்கப் அப்புச்சிக்கும் நன்றி..

Share this post


Link to post
Share on other sites

நல்ல சிந்திக்கவைக்கும் பதிவு,

மொழி அழியாமல் காக்க ஸிந்திக்களை போல் நடக்கவேண்டும்.

ஸிந்தி மொழிக்கு நாடில்லை (பாக்கிஸ்தானிலிருந்து விரட்டியாகிவிட்டது) அம்மொழியின் எழுத்து வடிவம் கிட்ட தட்ட உருது போல் இருக்கும் ஆனால் சிந்திக்கள் தங்களுக்குள் பேசும் பொழுது அம்மொழியில் தான் பேசுகின்றனர் இளம் தலைமுறைக்கு வீட்டில் தாங்களே கற்று தருகிறார்கள்.

இதே போல் தான் பஞ்சாபி (உருது வடிவ) மொழியும் பஞ்சாபி மொழிக்கு இரு வடிவம் உண்டு ஒன்று உருது வடிவம் மற்றது குர்முகி (பாழாய்ப்போன இந்தி வடிவம்).ஆனால் இரு வடிவத்தையும் இன்று வரை அவர்கள் இழக்கவில்லை

ஸிந்திக்களையும் பஞ்சாபிக்களையும் பார்த்து நாம் கற்றுகொள்ள வேண்டியது மொழியை எங்கணம் காப்பாற்றுவது என்று

Share this post


Link to post
Share on other sites

பொறியியல் படித்துவிட்டு எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தீர்கள்?

நான் மாத்திரமில்லை. என்னைப் போலப் பலபேர் இங்கே வந்து முற்றிலும் வேறு வேலை செய்கிறார்கள். ஆங்கிலத்தில் இன்னொருமுறை பொறியியல் படிக்க என்னால் முடியவில்லை.

தாய்மொழியில் தொழில்நுட்ப பாடங்களை படிப்பதில் இப்படியும் ஒரு சிக்கல் இருக்கிறது..

Edited by ஹரிஹரன்

Share this post


Link to post
Share on other sites

நான் இதை முன்பே எழுதி இருக்கேன்.

ஆங்கிலம் ஆளும் நாடான பிரிட்டானிய நாட்டில், வேல்ஸ் என்று ஒரு ஒரு பகுதி இருக்கு

அந்த பகுதியில் இன்ரும் அவர்கல் தாய் மொழி சிரப்பாக கொண்டாடப்பட்டு வழக்கில் இருக்கு

எல்லா வெய்தி பலகைகளிலும் மற்றும் அரசு மற்றும் எல்லானிலையும் தரப்படும் வின்னப்ப படிவஙள் மற்றும் மானவர்களுக்கு தரப்படும் அறிவிப்புகள் எல்லாம் ஆங்கிலம் மற்றும் "வெல்ச்" மொழியில் தரப்படுகிறது

இரு வெல்ச் மக்கள் சந்தித்தால் அவர்களுக்குல் பேசிக்கொள்ளும் மொழி அவர்களின் வெல்ச் தான், மற்றாபடி அந்த மொழியில் மருத்துவம் பொரியிஅல் எல்லாம் சொலித்தரபட வில்லை. இருந்தாலும் அந்த மொழி வாழும் ஏன் என்றால் அந்த மொழி பேசும் மக்களுக்கு அந்த மொழி மேல் உள்ள பிடிப்பு அப்படி

----

Share this post


Link to post
Share on other sites

கவலை வேண்டாம் தமிழ், தெலுகு, கன்னடம் மலையாளம் அழியவே அழியாது

தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் அழிவு பாதித்தூரத்திற்கு மேல் சென்று விட்டது!

'தமிழ் வசனங்களையே' தமிழில் டான்ஸிலேட் பண்ணு என்று கேட்கின்ற நிலை தமிழகத்தில் தமிழுக்கு! இதுதான் அழிவுப் பொறியை கலாச்சாரமாக்கி விடுவது. இந்தி எந்திரத்தின் நாசூக்கான சதி இது!

Share this post


Link to post
Share on other sites

தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் அழிவு பாதித்தூரத்திற்கு மேல் சென்று விட்டது!

'தமிழ் வசனங்களையே' தமிழில் டான்ஸிலேட் பண்ணு என்று கேட்கின்ற நிலை தமிழகத்தில் தமிழுக்கு! இதுதான் அழிவுப் பொறியை கலாச்சாரமாக்கி விடுவது. இந்தி எந்திரத்தின் நாசூக்கான சதி இது!

தேவன் இந்திக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை... ஆங்கில மோகம் தான் காரணம்...

Share this post


Link to post
Share on other sites

தேவன் இந்திக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை... ஆங்கில மோகம் தான் காரணம்...

அந்த மோகத்தை உருவாக்கும் ஆதாரம் எது? ஏனைய நாடுகளில், ஏன் அப்படி தனது சொந்தப் பாசைப் பாவனை அவர்களுக்கு பிற்போக்குத்தனமானது என்ற எண்ணத்தை விதைக்க வில்லை?

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0